நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பின்பற்றப்படும் கொடுப்பனவு நடைமுறை அரசின் நிதி ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமை குறித்து கோபா குழுவின் கவனத்திற்கு

  • பஸ்னாகொட நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தக்காரர்கள் முன்வைத்த 2,093 மில்லியன் ரூபாய் விலை மனு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய 254 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை பற்றி கோபா குழு அதிகாரிகளிடம் கேள்வி

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பின்பற்றப்படும் கொடுப்பனவு நடைமுறை அரசின் நிதி ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் அந்த நடைமுறையை சரி செய்வதற்கு இதற்கு முன்னர் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் குழுவின் தலைவரின் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், 2022 இல் 352,420,052 ரூபாய் பெறுமதியான 1177 காசோலைகள் பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாரின் பெயருக்கு வழங்கி, குறுக்குக்கோட்டை இரத்துச் செய்து கொடுப்பனவை உறுதிப்படுத்திய பிராந்திய உதவியாளரே காசோலைகளை மாற்றியுள்ளமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் முறையான நடவடிக்கையை எடுக்குமாறு கோபா குழு அதிகாரிகளுக்கு பரிந்துரை வழங்கியது. 

பஸ்னாகொட நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தக்காரர்கள் முன்வைத்த 2,093 மில்லியன் ரூபாய் விலை மனு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய 254 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 2,347 மில்லியன் ரூபாய்க்கு வழங்கியமை பற்றி கோபா குழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பான கணக்கீட்டில் பிழை நேர்ந்துள்ளதாகவும், அதனை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், கின் நில்வலா திட்டத்தின் மதிப்பீட்டில் 4.35% வேலை ஆரம்பிக்கப்பட முன்னர் முற்பணமாக செலுத்தப்பட்டாலும் அந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படாமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தி, கௌரவ ஜே.சி. அளவதுவள மற்றும் கௌரவ ஜயந்த கெடகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply