இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்ஸ், பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (17) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரித்தானியத் தூதுவர், பிரித்தானியப் பாராளுமன்றத்தின் சபாநாயகருடைய வாழ்த்துக் கடிதத்தையும் கையளித்தார். பிரித்தானிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக் குழுவினர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம் பற்றிய தகவல்களையும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பில் பகிர்ந்துகொண்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை-பிரித்தானிய பாராளுமன்ற நட்புறவு சங்கம் மீளமைக்கப்படவிருப்பதை வரவேற்ற அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்குப் பல்வேறு துறைகளில் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்தார். கடன்மறுசீரமைப்புத் திட்டத்தில் பிரித்தானியா அண்மையில் வழங்கிய உதவிகளையும் அவர் நினைவுகூர்ந்தார். ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியன இலங்கைப் பாராளுமன்றத்திற்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், எதிர்காலத்திலும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் திறன்மோம்பாடு, பாராளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் பாராளுமன்ற பொதுமக்கள் தொடர்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டன.
The post பிரித்தானிய உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார் appeared first on PFP News.