இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 செப்டெம்பர் 11ஆம் திகதி “வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்)” எனும் சட்டமூலத்திலும், 2024 செப்டெம்பர் 13ஆம் திகதி “வெளிநாட்டு தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்தல்” மற்றும் “குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்களிலும் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகரினால் சான்றுரை எழுதப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் முதற்கோலாசானாகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கயந்த கருணாதிலக்க நியமனம்
பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சியின் முதற்கோலாசானாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார்.
தவிசாளர் குழாத்திற்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்கான தவிசாளர் குழாத்திற்கு உள்ளடக்குவதற்கு கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி, கௌரவ இம்ரான் மகரூப், கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன, கௌரவ (சிரேஷ்ட பேராசிரியர்) சேன நாணாயக்கார, கௌரவ சானக மாதுகொட, கௌரவ சஞ்ஜீவ ரணசிங்ஹ, கௌரவ அரவிந்த செனரத், கௌரவ கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் தன்னால் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபாநாயகர் இன்று (03) சபையில் அறிவித்தார்.
The post சட்டமூலம் சான்றுரைப்படுத்தப்பட்டது appeared first on PFP News.